"ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : மார் 19, 2024 04:43 PM

சென்னை: 'ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன். ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் 'இண்டியா' கூட்டணியை வரும் லோக்சபா தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் பா.ஜ., அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்கள் விரோத - மாநில உரிமைகளைப் பறித்த பா.ஜ., ஆட்சியை விரட்டிட, இண்டியா கூட்டணியில் இணைந்து தி.மு.க தேர்தலை சந்திக்கிறது. நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தலில் வெற்றி பெற பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் 'நாற்பதும் நமதே! நாடும் நமதே!' என்கிற வகையில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

