''நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது'': சீமான்
''நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது'': சீமான்
ADDED : மே 07, 2024 04:27 PM

சென்னை: ''நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு?'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பாடலா, இசையா எனக்கேட்டால் இரண்டும் முக்கியம் தான். மொழி உடல்; இசை உயிர். இரண்டையும் பிரிக்கக்கூடாது. இளையராஜா உரிமையைதான் கேட்கிறார்; மற்றவர்களுக்கு உரிமையை தரக் கூடாது என கூறவில்லை.
இளையராஜா, வைரமுத்து பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைதான். படத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல. நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும்? வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. தமிழகத்தில்தான் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர்.
சின்ன மூக்குத்தியில் கூட 'பிட்' அடிப்பார்கள் என சொல்லி கழற்ற சொல்கிறார்கள்; ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர்களே சொல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.