நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
ADDED : ஏப் 20, 2025 08:15 AM

ஸ்ரீநகர்: நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானத்தில் பயணம் செய்த, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா போட்டோ வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அவசர வேலையாக டில்லி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரது விமானம் டில்லி விமான நிலையத்தில் நெரிசல் காரணமாக, வானில் 3 மணி நேரம் வட்டமடித்தது. இதனால் உமர் அப்துல்லா கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.
இது குறித்து அதிருப்தி தெரிவித்து, உமர் அப்துல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லி விமான நிலையம் அலங்கோலத்துடன் காட்சி அளிக்கிறது. மன்னிக்கவும், அமைதியாக இருப்பதற்கான மனநிலையில் நான் இல்லை. ஜம்மு காஷ்மீரை விட்டு புறப்பட்டு 3 மணிநேரம், விமானத்தில் வானிலேயே பயணித்தபடி இருந்தேன். நான் பயணம் செய்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
அதிகாலை 1 மணியளவில் விமானத்தில் இருந்து கீழே இறங்கினேன். சற்று புதிய காற்று வீசியது. இந்த பகுதியில் இருந்து, எப்பொழுது கிளம்பி செல்வோம் என்பது தெளிவாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார். விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
இதன் பின்பு அதிகாலை 3 மணிக்கு டில்லி வந்துவிட்டேன் என உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.