ADDED : ஆக 07, 2011 11:12 AM

கோவை: 'கிரெடாய்' அமைப்பினர் நடத்தும் 'பேர்ப்ரோ - 2011' கண்காட்சி, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடந்தது.
ரியல் எஸ்டேட் தொடர்பான இக்கண்காட்சியின் துவக்க விழாவில், 'கிரெடாய்' தமிழ்நாடு தலைவர் சிட்டிபாபு பேசுகையில், ''இந்திய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக அரசு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இரண்டாம் நிலை நகரங்களில் கோவை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கிரெடாய் <உறுப்பினர்களின் நிறுவனங்களில் சொத்து வாங்குவோருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இவ்வமைப்பில் தெரிவிக்கலாம்; விசாரித்து உரிய நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி பேசுகையில், ''கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடு கட்டுவதற்கு முன் அந்த இடம், சட்டப்படி அங்கீகாரம் பெறப்பட்டதா என்பதையும், பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்டதா என்பதையும் பார்த்து பின் கட்டுமான பணியை துவக்க வேண்டும்,'' என்றார். கண்காட்சியில், பல முன்னணி ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு வங்கிகளின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. துவக்க விழாவில், கிரெடாய் அமைப்பின் கோவை தலைவர் சுப்ரமணியன், பேர்புரோ சேர்மன் மதன் லுண்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சி குறித்து 'பேர்ப்ரோ - 2011' கண்காட்சியின் சேர்மன் மதன் லுன்ட் கூறியதாவது: மக்களுக்கும், கட்டுமானத் துறைக்குமிடையே பாலமாக இருத்தல், கோவையில் கட்டுமானத் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் கணிசமாக உயர்த்துதல், நகர வளர்ச்சியில் பங்கெடுத்தல் என்னும் உயரிய நோக்கங்களோடு இயங்கும் 'கிரெடாய் - கோயமுத்தூர்' அமைப்பின் முந்தைய செயல்பாடுகள் மற்றும் இவ்வமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பகத்தன்மை காரணமாக, 'பேர்ப்ரோ 2011' வீட்டு மனைக் கண்காட்சி, மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கண்காட்சியின் முதல் நாளன்று, ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். இதில் 'கிரெடாய்' உறுப்பினர்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 36 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 120 லட்சம் ச.அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையுள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், 'கேட்டட் கம்யூனிட்டி' ஆடம்பர வீடுகள் என பல்வேறு வகை வசிப்பிடங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் தொகையிலும் வீடுகள் கிடைக்கும். வீடு வாங்குவோருக்கு தேசிய மயமாக்கப்பட்ட முன்னணி வங்கிகள் மூலமாக உடனடி வீட்டுக்கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த கண்காட்சிகள் மற்றும் 'கிரெடாய்' அமைப்பின் தொடர் செயல்பாடுகளை கோவை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதால், 'பேர்ப்ரோ -2011'க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சென்ற முறை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட இக்கண்காட்சியின் விற்பனை, 32 கோடி ரூபாயை எட்டியது. இந்த முறையும் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனையையும் எதிர்பார்க்கிறோம், என்றார்.