ADDED : ஜன 08, 2024 05:00 AM

தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழக ஒட்டுமொத்த கடன் தொகை, 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதில், 40 சதவீதம், தி.மு.க., ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டு உள்ளது. தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த, தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல், பஞ்சப்பாட்டு பாடுவதே, தி.மு.க., அரசின் செயலாக உள்ளது.
டவுட் தனபாலு:
தமிழகத்தின் பொருளாதாரத்தை சரி செய்ய, பிரபல பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமிச்சதே... அந்த குழு என்ன ஆனது; ஏதாவது ஆலோசனைகள் தந்ததா என்ற, 'டவுட்'டுக்கு தமிழக அரசு விடை தருமா?
---
தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்:
'பிரதமர் மோடி, ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது; அவர் ராமரை தொடக்கூடாது; புரோஹிதர் தான் தொட வேண்டும். அவர் தொடுவதாக அறிவித்துள்ளதால், நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்' என, புரி சங்கராச்சாரியார் அறிவித்துள்ளார். சனாதன ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக, சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை கேள்வி கேட்கும், பா.ஜ.,வினர், இப்போது எங்கே உள்ளனர்; புரி சங்கராச்சாரியாரை கண்டிக்க, பா.ஜ.,வுக்கு தைரியம் உள்ளதா?
டவுட் தனபாலு:
புரி சங்கராச்சாரியார் கதையை விடுங்க... கிட்டத்தட்ட, 55 வருஷங்களுக்கும் மேலாக, தி.மு.க.,வின் தலைமை பீடத்தை, கருணாநிதியின் குடும்பம் மட்டுமே அலங்கரிக்குதே... அடுத்தும் வாரிசுகளை தயார்படுத்துறாங்களே... இது என்ன வகை சனாதனம் என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தருவீங்களா?
---
பா.ம.க., தலைவர் அன்புமணி:
மதுவும், போதையும் தமிழகத்தின் பொது அடையாளங்களாகி விட்டன. பேரழிவுப் பாதையில் தமிழகம் வேகமாக வெற்றி நடை போடுகிறது. மதுவையும், கஞ்சாவை யும் ஒழிக்காமல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாலோ, ௧ லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயிப்பதாலோ, எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
டவுட் தனபாலு:
அட இவர் வேற... இந்த மாதிரி மாநாடு நடத்துற மண்டபங்கள்லயே மது பரிமாறணும்னு சொல்ற அரசிடம் போய், இதை எல்லாம் சொல்றாரே... இது எல்லாம், செவிடன் காதுல ஊதிய சங்காகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!