" சின்னத்தில் விவசாயி இல்லை; எண்ணத்தில் இருக்கிறது": சீமான்
" சின்னத்தில் விவசாயி இல்லை; எண்ணத்தில் இருக்கிறது": சீமான்
UPDATED : மார் 03, 2024 04:10 PM
ADDED : மார் 03, 2024 12:16 PM

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் கை நழுவியது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‛‛ சின்னத்தில் விவசாயி இல்லை; எண்ணத்தில் இருக்கிறது'' என்றார்.
இது குறித்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன். நான் மயில் சின்னத்தை கேட்ட போது தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர். ஆனால் தேசிய மலர் தாமரை பா.ஜ.,விற்கு கொடுக்கப்பட்டது ஏன்?. பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன்.
என்னை முடக்க சதி
அங்கீகாரம் பெறுவதற்குள் என்னை தூக்கி எறிந்து விடுகிறீர்கள். கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள். 6 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் நான் போட்டியிட்டுள்ளேன். சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துள்ளது. தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் சின்னம் ஒதுக்கியது ஏன்?. நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது.
நானே விவசாயி, நான் தான் சின்னம்
ஒரு இடத்தில் கூட 100 ஓட்டுகளுக்கு மேல் பெறாத கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுத்துள்ளனர். சின்னத்தில் விவசாயி இல்லை; எண்ணத்தில் இருக்கிறது. நானே விவசாயி நான் தான் சின்னம். இப்பொழுது எதோ ஒரு சின்னத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். நீதிக்காக சண்டை போடுகிறேன். இந்த அநீதியை இனி தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது.
பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னம் அங்கீகாரம் ரத்து ஆகிவிட்டது. ஆனால் கேட்ட உடன் மாம்பழம் சின்னத்தை கொடுக்கிறார்கள்.
கடைசி நொடி வரை போராடுவேன்
என்னைப் போல் முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., அண்ணாமலை போன்றோரை தனித்து போட்டியிட சொல்லுங்கள். கரும்பு விவசாயி சின்னத்தை பெற கடைசி நொடி வரை போராடுவேன். இவ்வாறு சீமான் கூறினார்.

