''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' : ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜூ
''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' : ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜூ
ADDED : மே 21, 2024 01:47 PM

சென்னை: காங்கிரஸ் எம்.பி., ராகுலை பற்றிய வீடியோவை பகிர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' என புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. நடப்பு லோக்சபா தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டு தேமுதிக.,வை கூட்டணிக்கு அழைத்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக முயற்சி செய்தது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து அந்த கட்சிகள் வெளிவர தயக்கம் காட்டியதால், தேமுதிக உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் உணவகம் ஒன்றில் மக்களுடன் எளிமையாக அமர்ந்து சாப்பிடுகிறார். இதனால் காங்கிரஸ் மற்றும் ராகுலை அதிமுக மறைமுகமாக ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்லூர் ராஜூவிடம் நமது தினமலர் நிருபர் கேட்டதற்கு, ''பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எளிமையாக யார் இருந்தாலும் நான் பாராட்டுவேன்'' என செல்லூர் ராஜூ பதிலளித்தார்.

