"யு.பி.எஸ்.சி., நேர்முக தேர்வை மாநில மொழிகளில் எதிர்கொள்ளலாம்'
"யு.பி.எஸ்.சி., நேர்முக தேர்வை மாநில மொழிகளில் எதிர்கொள்ளலாம்'
ADDED : ஜூலை 13, 2011 12:20 AM

மும்பை : 'யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வை ஆங்கிலத்தில் எழுதியவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளிலும், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம்' என, மும்பை ஐகோர்ட்டில், யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய சித்தரஞ்சன் குமார் என்பவர், மும்பை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்த 2008ல், சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை, ஆங்கிலத்தில் எழுதினேன். தற்போது நேர்முகத் தேர்வை, இந்தியில் எதிர்கொள்ள விரும்புகிறேன். தற்போதுள்ள விதிமுறைகள், இதற்கு இடம் கொடுக்கவில்லை. நேர்முகத் தேர்வில் பங்கேற்போர், தங்களது சொந்த மொழிகளில் பேசினால் தான், முழு அளவில் திறமை காட்ட முடியும். அதுதான், அவர்களுக்கு வசதியாக இருக்கும். இதன்மூலம், சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மாணவர்கள், அதிக அளவில் மத்திய அரசு பணிகளில் இடம் பெற முடியும். தற்போதுள்ள விதிமுறைகள், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. சம்பந்தபட்ட மாணவரின் தனிப்பட்ட பண்புகளை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தான், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆங்கிலம் பேசும் திறனை அறிந்து கொள்வதற்காக, நடத்தப்படவில்லை. எனவே, நேர்முகத் தேர்வில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு, யு.பி.எஸ்.சி., ( மத்திய பணியாளர் தேர்வாணையம்) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நேர்முகத் தேர்வில் பின்பற்றப்படும் விதிமுறைகளை, நிபுணர் குழு ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இதன்படி, பிரதான தேர்வை மாநில மொழிகளில் எழுதியவர்கள், யு.பி.எஸ்.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகள் (பிரதான தேர்வு எழுதிய மொழி), ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் பிரதான தேர்வை எழுதியவர்கள், இந்தி, ஆங்கிலம் அல்லது, அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம். இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த பொதுநல மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.