"நிராகரிக்கப்பட்ட சமூகத்தினருக்குத்தான் வாய்ப்பு ": சீமான் பேட்டி
"நிராகரிக்கப்பட்ட சமூகத்தினருக்குத்தான் வாய்ப்பு ": சீமான் பேட்டி
ADDED : பிப் 25, 2024 01:53 PM

திருச்சி: நிராகரிக்கப்பட்ட சமூகத்தினருக்குத்தான் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தஞ்சை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான கட்சித் தலைவன். அதனால் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடவில்லை. என் கட்சியின் பிரதிநிதிகள் பார்லிமென்டில் பேசுவார்கள். நான் இங்கு தான் நின்று பேச வேண்டும். கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள். ரகசியமாக பேசினார்கள் அதை வெளியில் சொல்வது மாண்பாக இருக்காது.
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டவர்களை வாழ வைக்காமல் இந்தியாவை வாழ வைக்க கிளம்பி இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழக மீனவர்கள் மட்டும் தான் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுகின்றனர். மற்ற மாநில மீனவர்களுக்கு இது போன்ற நிலை இல்லை. நான் நாற்காலியில் உட்கார்ந்தால், ஒரு மீனவனை தொடச்சொல் பார்க்கலாம்; முடியாது.
இந்தியாவில் ஓட்டு இயந்திரம் பயன்படுத்துவது ஒழிய வேண்டும். தமிழ் இனம் சாராத எத்தனையோ அமைச்சர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். நான் நிராகரிக்கப்பட்ட இதுவரை தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத சமூகத்தினரை தேடித் தேடி வாய்ப்பு கொடுக்கின்றேன். அதற்கு சாதியை கேட்டுத்தான் ஆக வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

