"ஒன்னு தான் கேட்டோம்: இரண்டு கொடுத்தாங்க": தினகரன் "குஷி"
"ஒன்னு தான் கேட்டோம்: இரண்டு கொடுத்தாங்க": தினகரன் "குஷி"
ADDED : மார் 20, 2024 05:05 PM

சென்னை: ஒரு தொகுதி போதும் என்று தான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என பா.ஜ., கூறியதாக அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இன்று (மார்ச் 20) தினகரன் கையெழுத்திட்டார்.
ஒன்னு கேட்டால் 2 கொடுத்தாங்க
பின்னர் தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலில் பா.ஜ., அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். பின்னர் பா.ஜ., கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். நான் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன்.
குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பா.ஜ., கூறியது. அமமுக 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். பா.ஜ., தொகுதிகளை அறிவித்த பின்னர், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
நான் பிறந்த மண்ணான தஞ்சையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளேன். ஆனால் அமமுக நிர்வாகிகள் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட விரும்புகிறார்கள். தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுகவின் ஓட்டு வங்கி அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பலத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

