டி.எஸ்.பி., பதவி உயர்வுக்காக 37 இன்ஸ்.,கள் காத்திருப்பு
டி.எஸ்.பி., பதவி உயர்வுக்காக 37 இன்ஸ்.,கள் காத்திருப்பு
ADDED : மார் 24, 2025 06:10 AM

சென்னை : காவல் துறையில், காவலர் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் பணிக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சப் - இன்ஸ்பெக்டர் தேர்வின் போது, 20 சதவீதம் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்கள் காவல் துறையில், குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 45க்கு கீழ் இருக்க வேண்டும்.
அந்த வகையில், 1998ல் நடந்த தேர்வில், காவல் துறையில் ஏற்கனவே பணிபுரிந்த, 148 பேர் சப் - இன்ஸ்பெக்டர்களாக தேர்வாகினர். அவர்கள், 1999ல் பயிற்சிக்கு சென்றனர். சப் - இன்ஸ்பெக்டராக தேர்வான, 148 பேருக்கும், 2010ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அவர்களில், 102 பேர் ஓய்வு பெற்று விட்டனர். ஒன்பது பேர் இறந்து விட்டனர். மீதம், 37 பேர் உள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் இந்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளனர். பொதுவாக எட்டு ஆண்டுகளில், இன்ஸ்பெக்டருக்கு டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு வரும். இவர்கள், 15 ஆண்டுகளாகியும் டி.எஸ்.பி.,யாகவில்லை.
அதற்கு காரணம், இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க, சீனியாரிட்டி தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தில் பெற்ற தடையை அதிகாரிகள் காரணம் காட்டுகின்றனர்.
அந்த தடையை அரசு நீக்கி, 15 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாகவே பணிபுரிந்து வரும் தங்களுக்கு, டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கி, தற்போது காலியாக உள்ள, 50 டி.எஸ்.பி., பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.