பொதுவெளியில் கிடக்கும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் 3.75 லட்சம் டன்
பொதுவெளியில் கிடக்கும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் 3.75 லட்சம் டன்
ADDED : ஆக 29, 2025 04:24 AM

சென்னை: தமிழகத்தில் மறுசுழற்சி செய்யப்படாத மின்னணு கழிவுகள், 3 லட்சத்து, 75,570 டன் அளவுக்கு பொதுவெளியில் இருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மாநில வாரியாக உருவாகும் மின்னணு கழிவுகள், மறுசுழற்சி செய்யும் யூனிட்கள் பற்றிய விபரங்களை தாக்கல் செய்யுமாறு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தோம். ஆனால், தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட எட்டு மாநில விபரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தில், 2024 -- 2025ல் 4 லட்சத்து, 66,578 டன் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், 15 மின்னணு கழிவுகள் மறு சுழற்சி யூனிட்கள் உள்ளன.
அதன் வாயிலாக, 91,008 டன் மின்னணு கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு உள்ளன; 3 லட்சத்து, 75,570 டன் மின்னணு கழிவுகள் பொதுவெளியில் இருப்பதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுதும், 19 மாநிலங்களில், 108 மாவட்டங்களில், 381 மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்கள் செயல்படுவதாகவும், அதன் வாயிலாக, 33 லட்சத்து, 3,922 டன் மின்னணு கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும் வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறுசுழற்சி செய்யப்படாத மின்னணு கழிவுகள் அதிக அளவில் பொதுவெளியில் இருப்பதை, அறிக்கை வெளிப்படுத்துகிறது.
எனவே, அனைத்து மாநிலங்களிலும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு, மறுசுழற்சி செய்யும் திறன் குறித்து, ஆறு வாரங்களுக்குள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.