'மெத் ஆம்பெட்டமைன்' தயாரிக்கும் 38 லிட்டர் மூலப்பொருள் சிக்கியது
'மெத் ஆம்பெட்டமைன்' தயாரிக்கும் 38 லிட்டர் மூலப்பொருள் சிக்கியது
ADDED : ஜன 02, 2025 05:52 AM

சென்னை: அரும்பாக்கம் பகுதியில், சில நாட்களுக்கு முன் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்ற வழக்கில், கொடுங்கையூரைச் சேர்ந்த தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27, நைஜீரியர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்..
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாதவரத்தில், 15 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து, எட்டு பேரை கைது செய்தனர்.
இந்த கடத்தல் கும்பலுடன், சிலர் தொடர்பில் இருப்பதும், இவர்களுக்கு 'மெத் ஆம்பெட்டமைன்' தயாரிக்கும் மூலப் பொருட்கள் விற்க முயற்சிப்பதும் குறித்து, அண்ணா நகர் துணை கமிஷனர் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி, 47, கணேஷ், 50, மற்றும் மதன், 45, ஆகிய மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களின் வீடுகளில் இருந்து, 'மெத் ஆம்பெட்டமைன்' மூலப்பொருளான 'சூடோபெட்ரின்' எனும் 38 லிட்டர் ரசாயனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், ''போதை பொருள் கடத்தல் கும்பலின் மொபைல் போனில் ஆய்வு செய்ததில், மூவரும் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டில்லியில் இருந்து மூலப்பொருளை வாங்கி வந்து, விற்பனை செய்ய முடியாமல் வீட்டில் வைத்திருந்தனர்; சமீபத்தில் மெத் ஆம்பெட்டமைன் விற்பனை அதிகரித்துள்ளதால், மீண்டும் விற்க முயன்றதால் சிக்கினர்,'' என்றனர்.