வரன் தேடுவோரிடம் பெண்கள் பெயரில் 'சாட்டிங்' செய்து மோசடி; 4 பேர் கைது
வரன் தேடுவோரிடம் பெண்கள் பெயரில் 'சாட்டிங்' செய்து மோசடி; 4 பேர் கைது
ADDED : மார் 31, 2025 12:41 AM

சென்னை: 'மேட்ரிமோனியல்' இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, திருமணத்திற்கு வரன் தேடுவோரிடம், பெண்கள் பெயரில், 'சாட்டிங்' செய்து, 89 லட்சம் ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
'மேட்ரிமோனியல்' எனப்படும், திருமணத்திற்கு வரன் தேடும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, வரன் தேடுவோரை குறி வைத்து, மர்ம கும்பல் பண மோசடி யில் ஈடுபட்டு வருகிறது.
தேனியை சேர்ந்த வாலிபர் ஒருவர், செயலி ஒன்றில் தன் சுய விபரங்களை பதிவு செய்து, வரன் தேடி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து, ஹரிணி என்பவர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
இருவரும், 'வாட்ஸாப்' எண்களை பகிர்ந்து, மணிக்கணக்கில் மனம் விட்டு பேசி வந்துள்ளனர். அப்போது, அந்த பெண், 'என் தந்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து, பல லட்சம் ரூபாயை இழந்து விட்டார்.
'தற்போது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கிறது. நீங்கள் என் வருங்கால கணவர் என்பதால் சொல்கிறேன். எனக்கு கிரிப்டோ கரன்சி முதலீடுகள் குறித்து தெரியும். நீங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அதை நம்பி, அந்த வாலிபர், 89 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதன் பின், தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து, 1930 என்ற எண் வாயிலாக, சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரிக்கும்படி, தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு, டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகோபால், 30; யுவராஜன், 33; சிவா, 31, கோவையை சேர்ந்த பத்மநாபன்,32 ஆகியோரை நேற்று முன் தினம் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெண்கள் பெயரில், மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். உடன், கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 3.90 லட்சம் ரூபாய், ஆறு மொபைல் போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலை புத்தகங்கள், 46 சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் 12, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் நான்கு பேரும், கம்போடியாவில் உள்ள சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களின் கூட்டாளிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.