ADDED : ஜன 09, 2024 02:44 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த மளிகை கடைக்காரர் திம்மராஜ், 40, கடந்த, 5ம் தேதி மாலை மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ஓசூர், சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வழக்கு ஒன்றில், அ.தி.மு.க., பெண் ஒருவருக்கு ஆதரவாக திம்மராஜ் சாட்சி சொல்லவில்லை என்ற கோபம் அந்த பெண்ணுக்கு இருந்தது.
அதுபோல, திம்மராஜ் மளிகை கடையில், அந்த பெண் நிறைய பாக்கி வைத்திருந்ததால், திம்மராஜ் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் மகன் தன் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, திம்மராஜை கொலை செய்தது தெரிந்தது.
இக்கொலையில் முக்கிய குற்றவாளியான அப்பெண்ணின் மகனான ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண், 22, மற்றும் ராஜ்குமார், 22, தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 21, ஆகிய, 3 பேர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.