எரிந்த நிலையில் 4 பேர் சடலம் காரில் இருந்து மீட்பு; நெல்லை அருகே மர்ம சம்பவம்
எரிந்த நிலையில் 4 பேர் சடலம் காரில் இருந்து மீட்பு; நெல்லை அருகே மர்ம சம்பவம்
UPDATED : மார் 17, 2026 01:56 PM
ADDED : மார் 17, 2026 10:38 AM

நமது நிருபர்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலையில், மர்மமான முறையில் எரிந்த காரில் இருந்த 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக இன்று (மார்ச் 17) காலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் எரிந்து கிடப்பதைக் கண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்:
எரிந்த நிலையில் உள்ள காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் குழந்தைகள்.
அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில், கார் விபத்துக்குள்ளான காரணத்தினால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், காரில் இருந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம், தற்செயலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காரின் பாகங்கள் மற்றும் அங்குள்ள தடயங்களைச் சேகரித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் விவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரில் இருந்தவர்கள் சென்னையை சேர்ந்த முகமது ரபி, செய்யது நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் சொந்த வீட்டை விற்பனை செய்த நிலையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்

