UPDATED : செப் 30, 2024 03:16 AM
ADDED : செப் 29, 2024 11:20 PM

சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களும் உடனே ஒதுக்கப்பட்டன.
தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். புதிதாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை 3:30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த கவர்னர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னரிடம், துணை முதல்வர் உதயநிதியை அறிமுகம் செய்தார். அதன்பின் முதல்வரும், கவர்னரும் விழா மேடைக்கு சென்றனர்.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. புதிய அமைச்சர்களாக இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், கா.மு.நாசர் ஆகியோர் வரிசையாக உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும், கவர்னர் மற்றும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். இறுதியாக தேசிய கீதம் இசைக்க, மாலை 3:45 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன்பின் அமைச்சர்கள் அனைவரும், கவர்னர் மற்றும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் தற்போது முதல்வருடன் சேர்த்து, அமைச்சர்கள் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும், உடனடியாக அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது. செந்தில் பாலாஜிக்கு, ஏற்கனவே அவரிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விழாவில், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
![]() |