அரசு விடுதியில் இருந்து 4 மாணவர்கள் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை
அரசு விடுதியில் இருந்து 4 மாணவர்கள் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை
ADDED : நவ 28, 2024 01:06 AM

கச்சிராயபாளையம், : பொட்டியம் அரசு பழங்குடியினர் நலப்பள்ளி விடுதியில் இருந்து நான்கு மாணவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கச்சிராயபாளையம் அடுத்த பொட்டியம் கிராமத்தில் அரசு பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கல்வராயன் மலையில் மாயம்பாடி, பன்னிப்பாடி, கொடமாத்தி, சின்னஇருப்பதி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 93 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு தலைமை ஆசிரியர், இரவு காவலர், சமையலர் என அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் அன்றிரவு 9.00 மணியளவில் 4 மாணவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றுள்ளனர்.
மாணவர்கள் அருகில் இருந்த கடைக்கு சென்றபோது மின்தடை ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் கடையில் இருந்த கேக், சாக்லெட் மற்றும் பன் உள்ளிட்ட தின்பண்டங்களை திருடிக் கொண்டு விடுதிக்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த கடை உரிமையாளர் சரவணன் நேற்று காலை 8.00 மணியளவில் விடுதிக்கு சென்று பணியிலிருந்த சமையலரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் விடுதியிலிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
தகவலறிந்து பள்ளிக்கு சென்ற கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார், தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விடுதியிலிருந்து தப்பி சென்ற 4 மாணவர்களும் தங்கள் கிராமத்திற்கு சென்று விட்டதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர்.