UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:27 PM
தஞ்சாவூர்: திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட நகையை உரியவரிடம் ஒப்படைக்காத எஸ்.ஐ., குமரவேல், , ஏட்டு தர்மலிங்கம், , உட்பட நால்வர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க, திருவோணம் போலீஸ் எஸ்.ஐ., குமரவேல் தலைமையில் ஏட்டு தர்மலிங்கம், போலீசார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நால்வர் கொண்ட தனிப்படையை, எஸ்.பி., சுந்தரவதனம் அமைத்தார்.
ஒரத்தநாடு பகுதியில் சமீபத்தில் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த எஸ்.ஐ., குமரவேல், குற்றவாளியால் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு, பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்கவில்லை என, கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், குமரவேல் தலைமையிலான தனிப்படையை, எஸ்.பி., சுந்தரவதனம் கலைத்தார். பல்வேறு வழக்குகளில் குமரவேல் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரியவந்தது.
எஸ்.பி., சுந்தரவதனம் உத்தரவில், எஸ்.ஐ., குமரவேல், ஏட்டு தர்மலிங்கம், போலீசார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நால்வரும், தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
