UPDATED : ஜூன் 12, 2024 12:59 PM
ADDED : ஜூன் 11, 2024 11:45 PM

சென்னை : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஆளுங்கட்சியான தி.மு.க., வேட்பாளரை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலை போல், இடைத்தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க.,வின் புகழேந்தி, உடல் நலக்குறைவால், ஏப்., 6ல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மனுத் தாக்கல்
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கல் செய்ய 21ம் தேதி கடைசி நாள்.
இடைத்தேர்தலில் தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில செயலரான அன்னியூர் சிவா போட்டியிடுவார் என, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
கடந்த, 2019ல், அ.தி.மு.க., ஆட்சியின்போதும், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வன், ஒரு லட்சத்து, 13,766 ஓட்டுகள் பெற்று, 44,924 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர் தோல்வி
தி.மு.க., 68,842 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட, அ.தி.மு.க., 6,823 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது. தொடர் தோல்வியாலும், லோக்சபா தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு கீழே போனதாலும், அக்கட்சிக்கு விக்கிரவாண்டி சோதனைக்களமாக மாறியுள்ளது.
அரவணைப்பு
சோர்ந்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த, இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், அ.தி.மு.க., களம் இறங்க உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன் உட்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனினும், மாவட்ட செயலர் சி.வி.சண்முகம் கூறும் நபரையே, பழனிசாமி வேட்பாளராக அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து முடிவு செய்வதற்காக, பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம், நாளை நடக்கும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத நிலையில், 2026 சட்டசபை தேர்தல் வரை, கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய நிலை, பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
விருப்பம்
எனவே, பா.ம.க., விருப்பத்தை ஏற்று, அக்கட்சிக்கு தொகுதியை விட்டு கொடுப்பதா அல்லது அக்கட்சி தலைமையிடம் பேசி, நாமே களம் இறங்குவதா என, தமிழக பா.ஜ., தலைமை, தேசிய தலைமையிடம் கேட்டு முடிவெடுக்கும் என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில், 8.14 சதவீத ஓட்டுகளை பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, வழக்கம்போல் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, லோக்சபா தேர்தலைப்போல், இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.