தலித்களுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரிப்பு; கவர்னர் நேரடி 'அட்டாக்'
தலித்களுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரிப்பு; கவர்னர் நேரடி 'அட்டாக்'
UPDATED : அக் 02, 2024 08:26 PM
ADDED : அக் 02, 2024 08:16 PM

சென்னை: '' தலித்களுக்கு எதிரான குற்றம் 3 ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என கவர்னர் ஆர்.என். ரவி கவலை தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசியதாவது: அமைதியான உலகிற்கு மஹாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றும் முக்கியமானதாக இருக்கிறது.
தமிழகத்தில் சமூக நீதியின் பெயரில் கூச்சல் இருந்தாலும், தலித் சகோதர சகோதரிகளுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து நடப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. தலித்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும், கற்பழிப்பு வழக்குகளில் தண்டிக்கப்படுவோர் விகிதம், தேசிய சராசரியில் பாதியளவே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறையால், ஆண்டுதோறும், நாம் ஏராளமான அப்பாவி உயிர்களை இழந்து வருகிறோம். இத்தகைய தனிநபர்கள் தான், சாராய மாபியாக்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவங்களில் இதனை பார்த்தோம். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.