40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட திட்டம்: ஜெ., பாணியில் இபிஎஸ்
40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட திட்டம்: ஜெ., பாணியில் இபிஎஸ்
ADDED : ஜன 29, 2024 02:00 PM

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பற்றி முடிவெடுக்க, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க என பலவிதமான குழுக்களை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக சார்பிலும் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
பா.ஜ., உடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்து, அதே பிடிவாதத்துடன் லோக்சபாவில் களமிறங்குகிறது அதிமுக. பா.ஜ.,வை கழற்றிவிட்டதால், பல கட்சிகள் தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கணக்கு போட்டார். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க அதிமுக குழு தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், அந்த கட்சிகள் இன்னும் தங்கள் நிலைபாட்டை வெளிப்படுத்தவே இல்லை.
இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், வேறொரு திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
கூட்டணி கட்சிகளையும் தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்தார். அதே பாணியில், பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணியில் இடம்பெறவில்லை என்றால், சிறிய கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்த்து 40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.