ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது
ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது
UPDATED : மார் 12, 2026 05:51 AM
ADDED : மார் 12, 2026 05:19 AM

ஊட்டி: நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் பூங்கா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்; 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்; தினக்கூலி பணியாளர்களுக்கு கலெக்டர் தீர்மானித்த ஊதியம் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தாவரவியல் பூங்கா முன், 400 ஊழியர்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பூங்காக்களில், கோடை சீசன் பணிகள் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அனைவரையும் போலீசார் கைது செய்து, என்.சி.எம்.எஸ்., அரங்கிற்கு கொண்டு சென்றனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் மோகன் கூறுகையில்,''கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டம் தொடரும்,'' என்றார்.

