மாணவிக்கு 400 தோப்புக்கரணம்; ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
மாணவிக்கு 400 தோப்புக்கரணம்; ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
ADDED : ஏப் 24, 2025 01:17 AM

சென்னை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.எஸ்.கோட்டை திருமாநகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2017ல், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், என் மகள் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளி தமிழ் ஆசிரியர் சித்ரா, என் மகள் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனக்கூறி, 2017 அக்டோபர் 24ம் தேதி, 200 முறையும், மறுநாள், 400 முறையும் தோப்புக்கரணம் போட செய்துள்ளார்.
சோர்ந்துபோய் வீட்டுக்கு வந்த மகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. என் மகளை பரிசோதித்த டாக்டர், பலமுறை தோப்புக்கரணம் போட்டதால், உள் உறுப்பு கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர் சித்ராவின் மனிதாபிமானமற்ற தண்டனையால், என் மகள் உடல், மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். எனவே, ஆசிரியர் சித்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்கரணம் போட வைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க, ஆசிரியை சித்ராவுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், வேண்டுமென்றே அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை; பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.
ஆணையம் நடத்திய விசாரணையில், மாணவியை இரண்டு நாட்கள் தோப்புக்கரணம் போட வைத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெளிவாகிறது.
எனவே, மாணவியின் தாய் பாண்டிச்செல்விக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.