ADDED : நவ 26, 2024 08:54 PM
மதுரை:''தமிழக பல்கலைகளில் துணைவேந்தர்கள் நியமனங்களில் சில இடர்பாடுகள் உள்ளன. அவை தீர்க்கப்பட்டு விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
மதுரையில், அவர் கூறியதாவது:
தமிழகத்தில், சென்னை, மதுரை காமராசர் உள்ளிட்ட பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனங்களில் கவர்னர், மத்திய அரசால் சில இடர்பாடுகள் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பெற்று மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி சுமுக தீர்வு கண்டு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும், அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 60க்கும் மேற்பட்ட முதல்வர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை காமராசர் பல்கலையில் நிலவும் நிதிநெருக்கடி பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண, அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.