கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்; த.வெ.க., நிர்வாகிகளுக்கு சி.பி.ஐ., சம்மன்
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்; த.வெ.க., நிர்வாகிகளுக்கு சி.பி.ஐ., சம்மன்
ADDED : டிச 27, 2025 02:09 AM

சென்னை: 'கரூரில், கூட்ட நெரிச லில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நாளை மறுநாள் டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, த.வெ.க., நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகா மிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்களின் விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
இக்குழுவினர், சமீபத்தில் கரூரில் முகாமிட்டு, உயிரிழப்புகள் நடந்த இடம் மற்றும் த.வெ.க., வினர் அனுமதி கோரிய இடங்களை, ஆய்வு செய்தனர்.
மேலும், கரூர் மாவட்ட எஸ்.பி., ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம், இரண்டு முறை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
த.வெ.க., மாநில பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதி யழகன் ஆகியோருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில், வரும், 29ம் தேதி, அதாவது நாளை மறுநாள், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்து விஜயிடம் விசாரணை நடத்தவும், சி.பி.ஐ., திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

