ADDED : பிப் 06, 2024 04:55 AM

சென்னை: 'அம்ரித் பாரத் ரயில் நிலைய' திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற புதிய திட்டத்தின் கீழ், படிப்படியாக 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் இரண்டாவது கட்டமாக, 44 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி, இந்த மாதம் இறுதியில் அடிக்கல் நாட்டுகிறார்.
பணிகள் முடிக்கப்பட்டுள்ள, 82 ரயில்வே மேம்பாலங்கள், 117 சுரங்க பாதைகளையும் திறந்து வைக்க உள்ளார்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் மட்டும் முதல் கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடு துறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய, 18 ரயில் நிலையங்கள், 381 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாவது கட்டமாக, சென்னை கிண்டி, மாம்பலம், சூலுார்பேட்டை, பரங்கிமலை என தமிழகத்தில், 30 ரயில் நிலையங்கள் உட்பட, தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

