ADDED : அக் 09, 2025 02:48 AM
சென்னை:சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில், சிலை மீட்பு பணிகள் தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
இதுவரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப் பட்டுள்ளன.
உலோகத் திருமேனிகளை பாதுகாக்கும் வகையில், 166 கோடி ரூபாயில், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் களவு எச்சரிக்கை மணி வசதியுடன், 1,889 பாதுகாப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 1,716 பாதுகாப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மாதந்தோறும் அறநிலையத்துறை, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு, நம் கலைப் பொக்கிஷங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் கல்பனா நாயக், காவல்துறை தலைவர் அனிசா உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.