'அவுட்சோர்சிங்' முறையில் 48 பணியாளர்கள் தேர்வு: ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை
'அவுட்சோர்சிங்' முறையில் 48 பணியாளர்கள் தேர்வு: ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை
ADDED : ஜூலை 14, 2025 01:17 AM

சென்னை: அலுவல் பணிகளுக்கு, 'அவுட்சோர்சிங்' முறையில், தனியார் நிறுவனம் மூலமாக, 48 பணியாளர்களை நியமிக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை விற்பனை தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை, 2017ல் ஏற்படுத்தப்பட்டன.
இந்த ஆணையம் துவங்கப்பட்ட போது, அதில் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்தது.
அப்போது அடிப்படை நிர்வாக பணிகளை மேற்கொள்ள, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பயன்படுத்தப்ட்டனர். துவக்கத்தில் இது தற்காலிக ஏற்பாடாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆணையத்துக்கு பல்வேறு நிலைகளில், நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க, 30க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
பணிகள் நடக்கவில்லை
ஆனால், இந்த பணியிடங்களை முழுமையாக பயன்படுத்தாமல், சி.எம்.டி.ஏ.,வில் ஓய்வு பெற்ற நபர்களையே, பல்வேறு நிலைகளில், ரியல் எஸ்டேட் ஆணையம் பயன்படுத்தி வந்தது.
இதனால் ஆணையத்தின் அடிப்படை பணிகள் சரியாக நடப்பது இல்லை. கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் பணிகளில் அபரிமிதமான தாமதம் ஏற்படுகிறது எனப் புகார் எழுந்தது.
இந்நிலையில் அலுவல் பணிக்கு, 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமிக்கும் பணிகளை ஆணையம் துவக்கி உள்ளது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தற்போது எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., வளாகத்தில், இரண்டாவது டவரில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம், விரைவில் அண்ணா நகர் கிழக்கில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
புதிய அலுவலகத்துக்கு மாற்றப்படும் நிலையில், பொது மக்கள், கட்டுமானத் துறையினர், அதிக அளவில் வந்து செல்வர். அதற்கு ஏற்ப விண்ணப்பங்களை பெறுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தட்டச்சர்
இதற்காக, சட்ட ஆலோசகர், விண்ணப்ப பரிசீலனை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், 48 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களை 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிக்க, மனிதவள நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். இவர்களுக்கு ஊதியம் வழங்க, மாதம், 15.52 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.