UPDATED : அக் 03, 2026 01:43 AM
ADDED : அக் 03, 2026 01:39 AM
பெருந்துறை: நுால் மற்றும் துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் டைஸ் மற்றும் கெமிக்கல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில், வரும், 5ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதற்கு, பெருந்துறை சிப்காட்டில் உள்ள சாய, சலவை ஆலைகள் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் என, சிப்காட் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
வேலை நிறுத்த போராட்டத்துக்கு தார்மீக ஆதரவளிக்கும் வகையில், சிப்காட் டெக்ஸ்டைல் பிராசசர் அசோசியேஷனில் இடம் பெற்றுள்ள, 55க்கும் மேற்பட்ட சாய, சலவை, பிரின்டிங் ஆலைகளும் இதில் பங்கேற்கும்.
மேலும் ஈரோடில் இயங்கி வரும், 400க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள், பவானி, காடையம்பட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் செயல்படும், 1,000 சாய சலவை ஆலைகளும் இதில் பங்கேற்க உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
