அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை
அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை
ADDED : அக் 01, 2024 01:11 AM

சென்னை: 'மாநகராட்சிகளில் வசிப்போர், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்' என, நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்; இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
சொத்து வரியை பொறுத்தவரையில், இரண்டு அரையாண்டுகளில் வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்., 1 முதல் செப்., 30 வரை. இரண்டாம் அரையாண்டு அக்., 1 முதல் மார்ச் 31 வரை.
இதில், அரையாண்டு துவங்கும் முதல் 30 நாளில் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. எனவே, முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகைகள் வழங்கி வருகிறது.
இந்த இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும்.
அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.