5 கிலோ சிலிண்டர் விற்பனை மாதம் ஒரு லட்சத்தை எட்டியது
5 கிலோ சிலிண்டர் விற்பனை மாதம் ஒரு லட்சத்தை எட்டியது
ADDED : டிச 13, 2024 10:24 PM
சென்னை:தமிழகத்தில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை, மாதம் ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கிறது.
இந்த சிலிண்டர் இணைப்பு பெற, 'ஆதார்' எண், முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.
இதனால், இடம் பெயரும் தொழிலாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
அவர்களின் வசதிக்காக, இந்தியன் ஆயில் நிறுவனம், 'சோட்டு' என்ற பெயரில், 5 கிலோ சிலிண்டர் விற்பனையை, 2020 டிசம்பரில் துவக்கியது. இந்த சிலிண்டரை ஏதேனும் ஒரு அடையாள அட்டை காட்டி வாங்கலாம்.
முதல் முறையாக வாங்கும் போது, ரெகுலேட்டர், காஸ் சிலிண்டர், ரப்பர் குழாய் போன்றவற்றுக்கு, 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சிலிண்டரை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
சிலிண்டரில் காஸ் தீர்ந்ததும், அதற்கு உரிய பணம் மட்டும் செலுத்தினால் போதும். இம்மாதம், 5 கிலோ காஸ் விலை, 564 ரூபாயாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன் வரை தமிழகம் முழுதும் மாதம் சராசரியாக, 60,000 என்றளவில் இருந்த, 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை தற்போது, ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.
இதற்கு, தமிழகத்தில் கட்டுமானம், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், அந்த சிலிண்டரை பயன்படுத்தி வருவது முக்கிய காரணமாகும்.