திருநெல்வேலியில் துப்பாக்கி விற்பனை: தி.மு.க., பிரமுகர் உட்பட 5 பேர் கைது
திருநெல்வேலியில் துப்பாக்கி விற்பனை: தி.மு.க., பிரமுகர் உட்பட 5 பேர் கைது
ADDED : ஜன 15, 2026 06:17 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் துப்பாக்கியை, ரவுடிகளுக்கு விற்பனை செய்ய முயற்சித்த தி.மு.க., பிரமுகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர்.
திருநெல்வேலி, முருகன்குறிச்சி, மூளிக்குளத்தை சேர்ந்தவர் ரத்னபாலன், 40, லாரிகள் வைத்து, மணல், ஜல்லி விற்பனை செய்து வந்தார். இவர் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் உறவினர்.
தி.மு.க., பொறியாளர் அணியில் பொறுப்பு பெற இருந்தார். இவர் அனுமதியின்றி பிஸ்டல் துப்பாக்கியை வைத்திருந்தார். அதை விற்பனை செய்ய முயற்சித்தார்.
மேலப்பாளையம் அமீர் சுகைல், 25, என்பவர் மூலம் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த பிரபல ரவுடி கோச்சா ஷாகுலுக்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கைத்துப்பாக்கியை விற்பனை செய்தனர்.
கோச்சா ஷாகுல் அதை பயன்படுத்திய போது சரியாக சுடவில்லை என கூறப்படுகிறது. எனவே, துப்பாக்கி வேண்டாம். பணத்தை திரும்ப தருமாறு ஷாகுல் பிஸ்டலை அமீர் சுகைலிடம் திருப்பிக் கொடுத்தார்.
அதை அவர் திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசியல் கட்சி பிரமுகருக்கு படம் அனுப்பி விற்க முயற்சித்தார். தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் மணிவண்ணன், துணை கமிஷனர் வினோத் சாந்தராம் ஆகியோர் மேலப்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அமீர் சுகைலிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து, அமீர் சுகைல், ரத்னபாலனையும் கைது செய்தனர்.
மேலும்,விற்பனைக்கு உதவிய மேலப்பாளையம் முஸாமில் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை திண்டுக்கல்லில் ஷாகுல், இதில் தொடர்புடைய சிக்கந்தர் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகளுக்குள் தொடர்பு
திருநெல்வேலி மேலப்பாளையத்திற்கும், திண்டுக்கல் பேகம்பூர் ரவுடிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. ஷாகுல் மீது, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2024ல் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முல்லான் செய்யது அலி என்பவர், ஒரு பீடி கம்பெனியின் பல ஏக்கர் நிலத்தை பல கோடி ரூபாய்க்கு வாங்கிய போது, பத்திரப்பதிவில் முத்திரை கட்டணத்தை குறைத்து பதிவிட்டது தெரியவந்தது.
இது குறித்து, சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவர் பத்திரப்பதிவுத்துறைக்கு புகார் அனுப்பினார். அதில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு குறித்து புகார் அனுப்பினார்.
இதனால் ஆத்திரமுற்ற முல்லான் செய்யது தரப்பினர், திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படை ஷாகுல் மூலம், பெர்டின் ராயனை கொலை செய்ய முயற்சித்தனர். 2024 மே மாதம் இரண்டு கைகளிலும் வெட்டு காயமடைந்த பெர்டின் ராயன் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் முல்லான், முசாமில், ஷாகுல், முகமது ஹக்கீம் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். முல்லான் செய்யது, அப்துல் அஜீஸ், தாஜுதீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இருப்பினும், 70 நாட்களில் குண்டர் சட்டத்தை உடைத்து அனைவரும் விடுதலை பெற்றனர். அப்போது ஷாகுல் மற்றும் முசாமில் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் ரவுடியிசம், துப்பாக்கி விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

