UPDATED : நவ 11, 2026 11:00 PM
ADDED : நவ 11, 2026 10:58 PM

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த, ஓட்டல் உள்ளிட்ட 5 ரிசார்ட்களை மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன், கோவை மாவட்ட ஆனைகட்டி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத தனியார் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, வழக்கு தொடர்ந்து இருந்தார்.
விசாரித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, ஆனைகட்டி வட்டாரத்தில் சட்டவிரோத தனியார் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தது.
மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்த பின், அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல்களை மூடி சீல் வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் இறுதி நோட்டீஸ் வழங்கியது.
இதில், சில தனியார் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் நிர்வாகிகள் தானாக முன்வந்து மூடினர். இறுதி அறிவிப்பு வழங்கியும், மூடாததால் கோவை மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று சீல் வைத்தனர்.
நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் தார்ஜா ரிசார்ட் தனியார் தங்கும் விடுதி, நஞ்சுண்டாபுரம் பைவ் ஸ்டார் கார்டன் ரெஸ்டாரன்ட், வீரபாண்டியில் உள்ள ப்ரூஸ் ரெஸ்டோ அண்ட் காபே, எலிபண்ட் கண்ட்ரி பார்ம், சர்வா பார்ம் ஹவுஸ் உணவு விடுதி ஆகிய 5 விடுதிகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
இப்பணியில் கோவை வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பவித்ரா, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பி.டி.ஓ., விஜயகுமார், தனி அலுவலர், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டனர்.
