5 ஆண்டுகளாகியும் முடியல...எம்.பில்., படிப்பவர்கள் புலம்பல்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி 'அசால்ட்'
5 ஆண்டுகளாகியும் முடியல...எம்.பில்., படிப்பவர்கள் புலம்பல்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி 'அசால்ட்'
ADDED : நவ 27, 2025 09:10 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் ஓராண்டு எம்.பில்., படிப்பில் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளாகியும் முடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இப்பல்கலை கல்லுாரியில் 2021 வரை மாலை நேர எம்.பில்., படிப்புக்கான சேர்க்கை நடந்தது. கடைசி 'பேட்ச்' ஆக 2020 -2021 க்கான சேர்க்கை நடந்தது. அப்போது 12க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு 120க்கும் மேற்பட்டோர் சேர்க்கையாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பணியில் உள்ள ஆசிரியர்கள். உயர்கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் நோக்கத்தில் கூடுதல் கல்வித்தகுதிக்காக சேர்ந்தனர்.முறையாக தேர்வு எழுதியும், 'தீசிஸ்' சமர்ப்பித்தும் இதுவரை இவர்களுக்கு 'வைவா' நடத்தவில்லை. படிப்பு நிறைவுச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2021க்கு எம்.பில்., படிப்பு நிறுத்தப்பட்டதால் இனிமேல் படிப்பு நிறைவுச் சான்று பெற்றாலும் பயனுள்ளதாக இருக்குமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: 2022ல் அனைத்து தேர்வும் எழுதிவிட்டோம். 'தீசிஸ்' சமர்ப்பித்துவிட்டோம். ஆனாலும் நிறைவு சான்று வழங்கவில்லை. 2024ல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை சமர்ப்பிக்க கல்லுாரி நிர்வாகம் கேட்டதன் அடிப்படையில் ரசீதுகளை சமர்ப்பித்தோம். இதுபோல் மூன்றுமுறை கேட்டுள்ளது. ஆனால் இதுவரை எம்.பில்., முடிவுக்கு வரவில்லை. சில நாட்களுக்குமுன் பாதிக்கப்பட்டவர்கள் கல்லுாரி அலுவலர்களை சந்தித்து அதிருப்தி தெரிவித்தனர். அப்போது, 'வைவா' முடியவில்லையே என தெரிவித்து, எம்.பில்., தேர்வர்களின் 'கைடு'களிடம் சென்று அவர்கள் வழங்க வேண்டிய 10 மதிப்பெண்களை பெற்று சமர்ப்பிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு படிப்புக்கு விண்ணப்பித்து தற்போது 5 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராமல் தொடர்கதையாகிறது. வைவா நடத்தாதது யார் பொறுப்பு. இப்படிப்பில் சேர்ந்த நோக்கமே சிதைந்துவிட்டது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மதுரை காமராஜ் பல்கலை முன்வர வேண்டும் என்றனர்.

