புதுப்பிக்கப்பட்ட 50 ரயில் நிலையங்கள்; வரும் 19ல் திறக்கிறார் பிரதமர்
புதுப்பிக்கப்பட்ட 50 ரயில் நிலையங்கள்; வரும் 19ல் திறக்கிறார் பிரதமர்
ADDED : ஏப் 08, 2025 04:21 AM

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை, வரும், 19ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில், பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 40 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுதும், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி ஓராண்டாக நடந்து வருகிறது. பணி முடிக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை, வரும், 19ம் தேதி, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைக்கிறார்.
தெற்கு ரயில்வேயில் புதுப்பிக்கப்பட்ட, பரங்கிமலை, சூலுார்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், மன்னார்குடி,போளூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம் உட்பட 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இவற்றில், லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் முதல், 'ஏசி' மின்சார ரயில் சேவையையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.