ADDED : மே 24, 2025 06:13 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில், இணை பதிவாளர் தலைமையில் கூட்டுறவு அதிகாரிகள், சங்க லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 13 பாக்கெட்களில் இருந்த 50 சவரன் நகைகள் போலி என, தெரியவந்தது. போலி நகைகளை அடமானமாக வைத்து, 18.67 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களில், 10 ஆண்டுக்கும் மேலாக ஒரே செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுபோன்ற காரணத்தால் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை லாக்கரில் வைத்து, பல லட்சம் வரை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கி, முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட அளவில் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் உள்ள நகைகளை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.