UPDATED : டிச 19, 2024 07:07 AM
ADDED : டிச 19, 2024 06:49 AM

சென்னை: கம்போடியாவில், 500க்கும் மேற்பட்ட சைபர் குற்றவாளிகள் பதுங்கி உள்ளதாக, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பங்குச்சந்தை முதலீடு ஆசை காட்டி, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரிடம், 1.66 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூரைச் சேர்ந்த அபுதாஹீர், 43, கேசவராஜ், 41, கலீல் அகமது, 43, சென்னையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 35, ஆகியோரை, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில் கலீல் அகமது அளித்துள்ள வாக்குமூலம்:
நானும், என்னுடன் கைதான மூன்று பேரும், கம்போடியாவில் தங்கி, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்து வந்தோம். எனக்கு முன், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட மூவரும் தமிழகம் வந்து விட்டனர். நான் கம்போடியாவில் இருந்து திரும்பிய உடனேயே கைது செய்யப்பட்டேன்.
எங்களை போன்ற சைபர் குற்றவாளிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆட்களை, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துகின்றனர். கடத்தப்பட்ட நபர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றி வருகின்றனர்.
மறுத்தால் பட்டினி போட்டும், உடலில் மின்சாரம் பாய செய்தும் சித்ரவதை செய்கின்றனர். சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள், தினமும், 500 பேரிடமாவது பேசி, பண மோசடி செய்ய வேண்டும். தவறினால், அவர்களின் சம்பளத்தில் இருந்து, 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
கம்போடியாவில், 500க்கும் மேற்பட்ட சைபர் குற்றவாளிகள் பதுங்கி உள்ளனர். அவர்கள் விதவிதமான உத்திகளை பயன்படுத்தி, பண மோசடி செய்து வருகின்றனர்.
வங்கி அதிகாரிகள் போல எப்படி பேச வேண்டும்; பங்கு சந்தை முதலீடுகளை ஈர்ப்பது போல, வாட்ஸாப்பில் எப்படி தகவல் அனுப்ப வேண்டும்; சிக்கிய நபர்களை சிந்திக்க விடாமல் எப்படி மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பது குறித்து, எங்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.