500 டாக்டர், நர்ஸ்கள் நகராட்சிகளில் நியமனம் அமைச்சர் நேரு தகவல்
500 டாக்டர், நர்ஸ்கள் நகராட்சிகளில் நியமனம் அமைச்சர் நேரு தகவல்
ADDED : பிப் 22, 2024 02:41 AM
சென்னை:''தமிழக நகராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - துரை சந்திரசேகர்: பொன்னேரி தொகுதி, சோழவரம் ஊராட்சி ஒன்றியம், சீமாவரம் ஊராட்சிக்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்தை, அரசு செயல்படுத்துமா?
அமைச்சர் நேரு: கருத்துரு வந்துள்ளது. விரைவில் நிறைவேற்றப்படும்.
துரை சந்திரசேகர்: மீஞ்சூர் சுற்றுவட்ட கிராமங்களில், குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. இதற்கு விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் நேரு: மீஞ்சூர் பகுதி முழுதும் குடிநீர் உப்பாக உள்ளது. எனவே, புதிய திட்டம் தீட்ட வேண்டும் என, ஒன்றியக் குழு தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூறினர்.
அங்கு முதன்முதலாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கப்பட்டது.
அங்கு தினசரி, 80 லட்சம் லிட்டர் தேவை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், தினசரி 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வாய் கண்டிகை பகுதியிலிருந்து, புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., -ஜோசப் சாமுவேல்ராஜ்: அம்பத்துார் தொகுதி வார்டு 83 பகுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை அமைக்க, 54 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டிலே செயல்படுத்த வேண்டும். விடுபட்ட தெருக்களிலும் செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் நேரு: புதிதாக சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் விடுபட்ட பகுதிகளிலும், பாதாள சாக்கடை, மழை நீர் கால்வாய் அமைக்க, திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. மழை நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அம்பத்துார் பகுதியில் விரைவில் பணி துவக்கப்படும்.
தி.மு.க., - எழிலன்: நகராட்சி துறையில் உள்ள, நகர்ப்புற சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் நிரந்தரமாக பணியில் இருக்க முடியாத நிலை உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஆண்டுதோறும் டாக்டர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. அவர்களை நகராட்சி துறையில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு நியமித்தால், நிரந்தரமாக இருப்பர்.
அமைச்சர் நேரு: நகராட்சிகளுக்கு தனியாக 500க்கு மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டு, நேரடியாக பணியில் அமர்த்தப்படுவர். மக்கள் நல்வாழ்வுத் துறை போல், அவர்களுக்கு பணி நீட்டித்து வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.