கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு
கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5,000 பேர் காத்திருப்பு
ADDED : டிச 31, 2025 06:36 AM

சென்னை: கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், கடன் தவணையை முழுமையாக செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல், 5,000 பேர், ஐந்தாண்டுகளாக காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் கடன் பெற்றவர்கள் நிலுவை தொகையை செலுத்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடன் நிலுவையை செலுத்திய, 8,000 பேருக்கு நீண்ட போராட்டத்துக்கு பின், பத்திரங்கள் வழங்கப்பட்டன.
அதன்பின், மீண்டும் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் நிலுவை தொகையை செலுத்தினர். ஆனால், அவர்களுக்கு தற்போது வரை பத்திரம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், கடன் நிலுவையை செலுத்திய, 5,000 பேர் பத்திரம் பெற காத்திருக்கின்றனர். வீட்டுவசதி சங்கங்கள், வீட்டுவசதி இணையத்துக்கு இடையிலான பிரச்னைகளே இதற்கு காரணம்.
சங்கங்கள் பெயரில் உள்ள கடன் நிலுவையை, நிர்வாக ரீதியாக மாற்றி அமைத்து, பத்திரங்களை வழங்க இணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இணைய அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியமாக உள்ளனர்.
இதனால், மற்றவர்கள் கடன் நிலுவையை செலுத்த தயங்குகின்றனர். இது சங்கங்களின் நிதி நிர்வாக பணியை பாதிக்கிறது. மக்களுக்கு மட்டுமல்லாது, சங்கங்களுக்கும் இப்பிரச்னை பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

