கன்னியாகுமரியில் மார்ச் 2ல் கர்மயோகினி சங்கமம் 50,000 பெண்கள் பங்கேற்பு
கன்னியாகுமரியில் மார்ச் 2ல் கர்மயோகினி சங்கமம் 50,000 பெண்கள் பங்கேற்பு
ADDED : பிப் 04, 2025 11:33 PM
சென்னை:ஆர்.எஸ்.எஸ்.,சின் சேவாபாரதி அமைப்பு சார்பில், மார்ச், 2ம் தேதி கன்னியாகுமரியில், 50,000 பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நடக்க உள்ளது.
இது தொடர்பாக, கர்மயோகினி சங்கமத்தின் தலைவர் சுதா சேஷையன், சேவாபாரதி மாநில தலைவர் வடிவேல் முருகன் ஆகியோர் அளித்த பேட்டி:
இந்தியாவில் அவதரித்த வீர பெண்கள் ராணி அகல்யாபாய் ஹோல்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அன்னை சாரதா, அவ்வையார், அமிர்தானந்தமயி, திலகவதி அம்மையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்ற நாட்டுக்காக தியாகம் செய்த பெண்களை கவுரவிக்கவும், அவர்களின் அருமை, பெருமைகளை வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்க்கவும், மார்ச், 2ம் தேதி, கன்னியாகுமரியில் கர்மயோகினி சங்கமம் நடக்கஉள்ளது.
அதில், நாடு முழுதும் இருந்து, 50,000 பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வில், தொண்டு, தியாகம், ஆக்கம், வீரம் நிறைந்த செயல்களை செய்து வரும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. பெண் துறவிகளும் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றிய புத்தகங்களும் வெளியிடப்பட உள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண் பிரபலங்கள், தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்வியாளர் நிர்மலா அருள்பிரகாஷ், வி.ஐ.டி., இயக்குனர் அனுஷா செல்வம், தாகூர் கல்வி குழுமத் தலைவர் மாலா மணிகண்டன், வி.எச்.பி., மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், சேவாபாரதி வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர் உடனிருந்தனர்.