ADDED : பிப் 08, 2025 01:02 AM
கனியாமூர்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ம் தேதி மர்மமாக இறந்தார். தொடர்ந்து, ஜூலை 17ல் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர்.
கலவரம் தொடர்பாக ஸ்ரீமதி தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தனர்.
நான்கு வழக்குகளில், 53 சிறார் உட்பட 916 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு, 41,250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி ராதிகா முன்னிலையில், 51 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்; இருவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.