5,436 தற்காலிக ரயில் பெட்டிகள் ரூ.22.97 கோடி வருவாய்
5,436 தற்காலிக ரயில் பெட்டிகள் ரூ.22.97 கோடி வருவாய்
ADDED : நவ 21, 2025 01:36 AM

சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த ஏழு மாதங்களில், 5,436 தற்காலிக பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 22.97 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், பயணியர் தேவைக்கு ஏற்ப, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள், தற்காலிகமாக இணைத்து இயக்கப்படுகின்றன.
கடந்த ஏப்., முதல் அக்., வரை, 5,436 ரயில் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கியதால், 22.97 கோடி ரூபாய், கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 2,077 பெட்டிகள் தற்காலி கமாக இணைத்து இயக்கப்பட்டதில், 6.45 கோடி ரூபாய் மட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ''பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்குவதில், தெற்கு ரயில்வே முன்னணியில் உள்ளது. கடந்த 2023ல் 1,682 ஆக இருந்த தற்காலிக பெட்டிகள் இணைப்பு, தற்போது 5,436 ஆக அதிகரித்திருப்பது வரவேற்கதக்கது,''என்றார்.

