தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை; தயார் நிலையில் 5,580 களப்பணியாளர்கள்
தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை; தயார் நிலையில் 5,580 களப்பணியாளர்கள்
ADDED : அக் 20, 2025 02:10 AM

''தமிழகம் முழுதும், வட கிழக்கு பருவமழையின் போது தடையின்றி மின்சாரம் வழங்க, மின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 5,580 பேர் தயார் நிலையில் உள்ளனர்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வடகிழக்கு பருவமழையின் போது, தடையின்றி மின்சாரம் வழங்க, ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும், செயற்பொறியாளர் மற்றும் பொது சிறப்பு அலுவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தலைமையில், கோட்ட அளவில் 15 பேர் அடங்கிய, இரண்டு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுதும், வடகிழக்கு பருவமழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 5,580 பேர் தயார் நிலையில் உள்ளனர். மிக உயர் அழுத்த பாதைகள், மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, 79 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
துணை மின் நிலையங்களில் டீசல், ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள், வாரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
மழை காலங்களில் உயர் அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். மின் அலுவலகங்களில் உள்ள தொலைபேசியை அணைத்து வைக்கக்கூடாது. இவற்றை மீறுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.