திருமங்கலம் அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 57 பேர் கைது
திருமங்கலம் அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 57 பேர் கைது
ADDED : செப் 11, 2011 11:24 PM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பஸ் மற்றும் வேன் கண்ணாடிகள் சேதமடைந்தன. கலவரத்தில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர். பரமக்குடியில் நேற்று நடந்த இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, திருமங்கலம் கப்பலூர் பாலத்தில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு செல்ல சாப்டூரில் இருந்து வேன் மேற்கூரையில் அமர்ந்து 2 வேன்களில் 57 பேர் சென்றனர். அந்த வேன்களை கப்பலூர் பாலத்தில் நிறுத்தி, போலீசார் விசாரித்த போது, வேனில் வந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவ்வழியாக வந்த (டி.என்.57, என்.1802) அரசு பஸ் மீது கல்வீசியதில், பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வந்த வேனின் கண்ணாடியும் உடைந்தது. எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையில் சென்ற அதிரடிப்படையினர் கலவரத்தில் ஈடுபட்ட சாப்டூர் மெய்னூத்துப்பட்டி சாமிநாதன், ஈஸ்வரன், அதியமான் உட்பட 57 பேரை கைது செய்தனர்.