யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் 57 பேர் தேர்ச்சி: 5 ஆண்டுகளில் அதிகம்
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் 57 பேர் தேர்ச்சி: 5 ஆண்டுகளில் அதிகம்
UPDATED : ஏப் 23, 2025 09:44 AM
ADDED : ஏப் 23, 2025 09:37 AM

சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., தேர்வில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்போது தான் அதிகளவு தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான, 'குரூப் - ஏ' மற்றும், 'பி' பணிகளுக்கான, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, 2024ம் ஆண்டு ஜூன், 16ல் நடந்தது.
9 லட்சத்து, 92 ஆயிரத்து, 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 5 லட்சத்து, 83 ஆயிரத்து, 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 14,627 தேர்வர்கள், 2024ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். பிரதான தேர்வில் வென்ற, 2,845 பேருக்கு, ஜன., 7 முதல் ஏப்ரல், 17 வரையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்து இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின.
இந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளார்.
சென்னையை சேர்ந்த ஏ. எஸ். ஜீ ஜீ என்பவர் தேசிய அளவில் 25வது இடத்தை பிடித்து உள்ளார். அவர் ஐ.எப்.எஸ்., ஆக விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இவர் தேர்வில், விருப்ப பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்து இருந்தார்.
அதேபோல் பவித்ரா என்பவர் தேசிய அளவில் 42வது இடத்தை பிடித்து உள்ளார். இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி உள்ள இவர், மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழக மின் வாரிய தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் தேசிய தரவரிசையில் 80வது இடம் பிடித்துள்ளார்.
பயிற்சி நிறுவனங்கள் கூறுகையில், இந்தாண்டு 140 மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களில் 57 பேர் தேர்ச்சி பெற்று அதிகாரிகள் ஆக உள்ளனர். இதற்கு கோவிட் காலத்திற்கு பின்பு மாணவர்கள் சிறப்பாக உழைத்து உள்ளனர்.
தன்னம்பிக்கையுடன், தொடர்புத் திறனை வளர்த்து கொண்டனர். இதனால், நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது. இந்தாண்டு மெயின் தேர்விற்கும், நேர்முக தேர்விற்கும் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு அளித்த நிதியுதவி, மாணவர்களுக்கு இருந்த அழுத்தத்தை குறைத்தது. நான் முதல்வன் திட்டத்தில் 559 மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி கிடைத்தது. அதில் 134 பேர் நேர்முக தேர்விற்கு தகுதி பெற்றனர். இந்தாண்டு பட்ஜெட்டில் நேர்முக தேர்விற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.