ஹீரோ ஆனது ஜீரோ...அதுவும் தொடர்ந்து 6 நாள்... சென்னை போலீசின் சாதனை சம்பவம்
ஹீரோ ஆனது ஜீரோ...அதுவும் தொடர்ந்து 6 நாள்... சென்னை போலீசின் சாதனை சம்பவம்
ADDED : ஆக 27, 2024 11:24 AM

சென்னை: சென்னையில் கடந்த 6 நாட்கள் எந்த சாலை விபத்தும் நிகழாமல் ஜீரோ உயிரிழப்பு நாட்களாக பதிவாகி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
கவலை
காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறோமோ இல்லையோ, டிராபிக்கில் மாட்டாமல் அலுவலகம் சென்றுவிடவேண்டும். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகன ஓட்டிகளின் அன்றாட கவலை இதுவாகத் தான் இருக்கும். குறிப்பாக சென்னையில் வாகன விபத்து, உயிரிழப்பு என பதிவாகாத நாளே இருக்காது எனலாம்.
போலீசார் திட்டம்
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டும், விபத்தில்லா சாலை பயணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டனர். அதற்காக zero accident day(ZAD) என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினர். கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த பிரசாரம் 25ம் தேதியுடன் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்றது.
ஜீரோ டே
சென்னையில் போக்குவரத்து நிறைந்த பகுதிகள், சாலைகளில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு ஜீரோ டே குறித்து மக்களின் பார்வைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ரீல்ஸ் போட்டிகள், பரிசுகள் என அறிவித்து விபத்தில்லா பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மைல்கல்
போதிய விழிப்புணர்வின் வெளிப்பாடாக கடந்த 6 நாட்களாக சென்னையில் எவ்வித விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட வில்லை என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து காவல் பணியில் இது ஒரு மைல்கல் என்றும், இதே நிகழ்வுகள் இனியும் தொடர வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பூரிப்புடன் வெளியிட்டு உள்ளனர்.
சபாஷ்
விபத்து, உயிரிழப்பு இல்லாமல் சாலை பயணத்தை அமைத்து, சென்னை சாலைகள் இனி நாட்டிலேயே பாதுகாப்பானவை என்ற பெயர் பெற ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். சாலை விபத்து, உயிர்பலி இல்லா சென்னை என்ற சாதனையை படைத்துள்ள சென்னை போலீசாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சபாஷ் போலீஸ்...!
