தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
ADDED : ஆக 14, 2025 01:43 PM

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கைது நடவடிக்கையை கண்டித்து இன்று மாலை மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:
* தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போதி, அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
* பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது, அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதனை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து சாப்பிடுவதற்கும், பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக காலை உணவு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.