திமுக அரசுக்கு 6 கேள்விகள்; முதல்வருக்கு அண்ணாமலை சவால்
திமுக அரசுக்கு 6 கேள்விகள்; முதல்வருக்கு அண்ணாமலை சவால்
ADDED : அக் 18, 2025 05:22 PM

சென்னை: திமுக அரசுக்கு ஆறு கேள்விகளை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுப்பி இருக்கிறார்.
அவரது அறிக்கை:
1. 2023-24ம் ஆண்டு CAG அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?
2. 2023-24ம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?
3. 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28,024 கோடி ரூபாயில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால் இவை வழங்கப்படவில்லை. ஏன்?
4. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது திமுக. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
5. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் புதிதாக கடன் வாங்கியது ஏன்?
6. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்?
இவற்றிற்கு பதிலளிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா? அடுத்த முறை நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
முதல்வருக்கு பதில்
அதே நேரத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பத்து கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த பத்து கேள்விகளுக்கு பதில் அளித்து அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுப்பி இருந்த 10 கேள்விகளை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்!