ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை; வியாபாரிகள் ஹேப்பி அண்ணாச்சி
ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை; வியாபாரிகள் ஹேப்பி அண்ணாச்சி
ADDED : அக் 31, 2024 12:07 PM

சென்னை: நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பட்டாசு விற்பனை கடந்த ஒரு வாரமாக சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ராக்கெட், சரவெடி என பல்வேறு விதமான பட்டாசுகளை வாங்கி வெடித்து வருகின்றனர்.
மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு பட்டாசு அதிகளவில் தேக்கமடைந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதம் விற்று தீர்ந்து விட்டதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
மழை காரணமாக, கடந்த ஆண்டை விட 75 சதவீத பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டது. நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளன, எனக் கூறியுள்ளனர்.